Saturday, February 22, 2014

ஸ்ரீதர் என்றொரு சீர்மிகு கலைஞன்!


ஸ்ரீதர் பிச்சையப்பா நம்மை விட்டுப் பிரிந்து நான் கு ஆண்டுகள் கழிந்து விட்டன. நண்பர் டிரோன் பெர்னாண்டோ முகநூலில் நினைவு படுத்தியிருக்கவில்லையெனில் இவ்வாண்டின் மறைவு தினம் எல்லோருக்கும் மறந்துதான் போயிருக்கும்.

ஸ்ரீதருக்கும் எனக்குமான நட்பு முகம் காணாத நிலையில் எழுபதுகளின் பிற்பகுதியில் நிகழ்கிறது.

புதுக்கவிதை சிறகு கட்டிப் பறந்த காலம் அது. மேமன் கவியும் ஸ்ரீதரும் சேர்ந்து ஒரு கவிதைச் சிற்றிதழ் வெளியிட இருப்பதாக ஒரு செய்தி பத்திரிகையில் படித்து, நானும் சில வரிகளை ஒரு போஸ்கார்ட்டில் எழுதி அனுப்பியிருந்தேன். அந்த இதழ் வரவே இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

1985ம் ஆண்டு கொழும்பில் அவனை முதன் முதலாகச் சந்திக்கிறேன். 'உன் போஸ்ட் கார்ட் இன்னும் நினைவிருக்கிறது, அதற்குக் காரணம் உனது எழுத்து அழகு!' என்று சொன்னான். எண்பதுகளின் எண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக் கலையரங்கில் நடந்த ஒரு சுவையான தமிழ் நிகழ்ச்சியில் மரிக்கார் ராம்தாஸூடன் ஒரு கும்மாளம் நடத்தினான். அன்று ஒரு மேளகாரனாக அந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் அவன் நடித்ததைப் பார்த்த போது அவன் பிறந்திருக்க வேண்டியது இங்கு அல்ல என்று என் மனது சொன்னது.

ஓவியத்தில் அவனுக்கு இருந்த ஈடுபாடு போல் கவிதையிலும் இருந்தது. எந்த இடத்தில் சந்திக்க நேர்ந்தாலும் தனியே இழுத்துக் கொண்டு போய் இந்தக் கவிதை வரியைக் கேளு என்று சொல்லிக் காட்டுவான். அதே போல எனது கவிதை வரிகள் பிடித்திருந்தாலும் சொல்வான். 'கிணற்றுக்குள் இருப்பவர்கள்' என்று ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கற்பனையை வென் வெகுவாகச் சிலாகித்தான். அவன் கவிதைகள் எழுதியிருக்கக் கூடும் என்றே நான் நம்புகிறேன். ஆனால் அவற்றை யாருக்கும் காட்டினானா என்பது தெரியவில்லை.

2000 மாம் ஆண்டு 'யாத்ரா' முதலாவது இதழ் வெளியீட்டில் கலந்து கொண்டான். ஏக்கலயில் இருந்த அவனது வீட்டுக்குச் சென்று அவனது ஓவியங்கள் சிலதை பலாத்காரமாகப் பறித்துக் கொண்டு வந்து யாத்ராவில் பிரசுரித்தேன்.

'யாத்ரா - 6'ல் அவனைப் பற்றி கவிஞர் அல் அஸூமத் எழுதிய நடைப்பாவிலிருந்து மூன்று அடிகளைப் பிரசுரித்தேன். தமிழக ஓலியர் விஸ்வம் வரைந்த அவனுடைய கோட்டோவியத்தை மட்டும் தனியொரு பக்கத்தில் இடம்பெறச் செய்தேன். கவிஞர் அஸூமத் எழுதிய அந்த நடைப்பா பகுதிகள் இவை:-

கண்ணுமேல நிக்காம கழண்டுபோயி மூக்குக்கு
முன்னால வழுக்கிவாற முசுப்பாத்திக் கண்ணாடி
ரெண்டுவயல் மீசைதாடி ரஸ்தியாதித் தலைமயிரு
கண்டவாட்டம் சுத்திவர்ர கால்ரெண்டு கைரெண்டு
கழுத்தையே அறுக்கிறதாக் கால்கால்னு வாயொன்னு
சுளுக்காத கண்ணுஜோடி சுத்தமான பொந்துமூக்கு
மைக்கேலு ஜக்ஸன்னு மனுஷிபோல் ஆடுவானே
ஐக்கியமாக் கொட்டமால அவென்மாதிரிப் போட்டிருப்பான்
சாவியொன்னும் அடுத்தாப்ல சங்கிலீல தொங்கீடும்
காவிமட்டும் கட்டீட்டாக் கச்சிதமா சந்நியாசி!

ஃப்ரீயாவே திரியிறவன் ஃப்ரீதரு பிச்சாஸோ
சுரீருன்னு சிரிக்காட்டிச் சுள்ளுன்னு தொணதொணப்பான்
றோட்லஒரு துண்டையும் றோலாக உடமாட்டான்
பாட்லஒரு துண்டையாச்சும் பாடாம உடமாட்டான்
சகலரையும் மொறவச்சிச் சட்டசேப்ல வச்சிருப்பான்
பகலெல்லாம் ஊருசுத்திப் பரிகாசம் பண்ணீட்டு
ராத்திரியில் ஊடுவந்து லைன்லைனாக் கோடிழுப்பான்
பாத்தம்னா பண்டாரம்! பாக்கலைன்னா பெருங்கலைஞ்சன்!

நாடகமும் நடிச்சுக்குவான் நையாண்டி பண்ணிக்குவான்
மேடைலயும் கவிதைன்னு வெடவெடப்பான் வந்து நின்னு
புளிமாங்காய் தேங்காய்லாம் புரியல்லன்னு பொலம்பிக்குவான்
முழியுருட்டி எழுதினத மூக்கிலயே வாசிப்பான்
புதுக்கவித மரபுன்னு பூச்சாண்டி புடிக்கமாட்டான்
எதுவருதோ அதையெழுதி எல்லாரையுங் கலங்கடிப்பான்
செலசமயம் என்னென்னமோ சீரியாசா வாசிப்பான்
செலசமயம் எப்படியுஞ் சிரிங்கடான்னு வாசிப்பான்
நாமயாருஞ் சிரிக்காட்டி நறுக்குன்னு அவஞ்சிரிப்பான்
நாமபின்ன அதப்பாத்து நல்லாவே சிரிச்சிடுவோம்!

கவிஞர் அல் அஸூமத்தை அவன் அப்பா என்றுதான் அழைப்பான். அவனைப் பற்றிய தகவல்கள் அவரிடமும் நிறைய உண்டு என்று நினைக்கிறேன்.

அவன் வெறுமனே ஒரு வித்தைகாட்டும் பபூன் என்றுதான் அநேகர் நினைத்திருக்கிறார்கள். ஆனால் அவன் ஓயாத வாசிப்புக் கொண்ட அறிவாளி என்பது அவனை நன்கு அறிந்தோருக்கு மட்டுமே தெரியும். பல்துறைத் திறமைகள் அவனிடம் இருந்த போதும் வெகு சாதாரணமாகவே நடமாடுவான். எப்போதும் எளிமையாகவே தோற்றந் தருவான். நகைச்சுவை அவனுக்கு கைவந்த கலை.

வானொலி நாடகம் ஒன்றை நடித்து விட்டு வந்த அவனை ஒருநாள் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தாழ்வாரத்தில் கண்டேன். “இங்கே வா.. ஒரு விசயம் சொல்லவேணும்” என்றான். இப்பதான் நாடகம் முடிச்சிட்டு வர்ரேன். எம்பேர எனவுன்ஸ் பண்ணின... (அறிவிப்பாளர் பெயர்) ஏம் பேர பிச்ச்ச்ச்ச்சயப்ப்பான்னு பிச்சி எடுத்துட்டான்டா! என்றான்.

2008ல் எனது கவிதை நூல் வெளியீட்டு விழாவில் அவனை இரண்டொரு வார்த்தைகள் பேச வைக்க ஆசைப்பட்டேன். நானும் கவிஞர் அல் அஸூமத்தும் அவனைத் தேடி இரண்டாவது முறை சென்போதே அவனைக் கண்டு பிடித்தோம். ஒரு மாலை நேரம் கட்டிலில் சாய்ந்து எதையோ வாசித்துக் கொண்டிருந்தான். வழமைபோல கவிதை சொன்னான். நகைச்சுவை சொன்னான். ஒன்றரை மணித்தியாலத்துக்கு மேல் அவனுடன் பேசிக் கொண்டிருந்தோம். வருவேன் என்று வாக்குறுதி தா என்று நின்றேன். வருவேன் என்றான். ஆனால் அவன் வரவில்லை.

கோபத்துடன்தானிருந்தேன். அவனைச் சந்தித்த அடுத்த கணம் அந்தக் கோபத்தை இல்லாதாக்கும் மந்திரம் அவனிடம் இருந்ததையும் அறிவேன். அதன் பிறகு அவனைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.

ஒரு நாள் மேமன் கவியிடமிருந்து அலைபேசிக்கு அழைப்பு வந்தது.

'ஸ்ரீதர் போய் விட்டான்!'

அவனுடைய ரசிகர் வட்டமும் நட்பு வட்டமும் மிகப் பெரியது. ஆனால் பெரிதாக இருக்கவேண்டிய அவனது வாழ்க்கை வட்டத்தை அவனே மிகச் சிறியதாக மாற்றிக் கொண்டு போய்விட்டான்!



இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: