Thursday, August 28, 2014

மொழியாள்கை


மொழியாள்கை

தஃலிமுல் குர்ஆன் அல்லது தத்ரீஸூல் குர்ஆன், அதிலிருந்து அல்குர்ஆனின் இடது புறமாக ஆரம்பிக்கும் 5 ஜூஸ்உ களின் தொகுப்பு, பிறகு முழு குர்ஆன், தொழுகை ஷாபிஈ, மவ்லூதுகள் ஆகியவற்றுடன் குர்ஆன் பாடசாலை இஸ்லாமியக் கல்வி முடிவடைய சாதாரண தரம் வரை படிக்கும் பளீல் மௌலவியின் 'சாந்தி மார்க்கம்' நூலுடன் ஒரு காலத்தில் இந்த சமூகத்தின் இஸ்லாம் பற்றிய கல்வி பூரணத்துவம் பெற்றதாகக் கருதப்பட்டது.

இன்று சுருங்கிய உலகு, அரபு நாடுகளுடனான தொடர்பு, சமூகங்களின் வாழ்வியல் மேம்பாடு, சிந்தனை மேம்பாடு, பிறதேசக் கல்வி என்று ஒரு பரந்த வெளிக்கு நமது சமூகம் வந்துவிட்டது. இஸ்லாமிய வரலாறு, சட்டவாக்கம், பொருளாதாரம், நபிகளாரினதும் தோழர்களினதும் வாழ்க்கை முறைகள் என்று எல்லாத் துறைகளையும் நம்மவர்கள் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சாந்தி மார்க்கத்துடன் இஸ்லாம் பூரணத்துவம் பெற்ற காலத்தில் அமைதியாக வாழ்ந்த இந்த சமூகம் இன்று அறிவியலில் விரிவான விளக்கங்களை வைத்தே தன்னைப் பிரித்து மோதிக் கொண்டிருக்கிறது. நான் பேச வருவது இந்த விடயம் அல்ல.

இஸ்லாம் குறித்த, இஸ்லாமிய சிந்தனையாளர்கள் குறித்த, அவர்களது சிந்தனைகள் குறித்த, உலகளாவிய இஸ்லாமிய அரசியல் குறித்த, நவீன சட்ட விளக்கங்கள் மற்றும் ஆய்வுகள் குறித்த பலநூறு நூல்கள் இன்று கற்றறிந்த நமது சகோதர்களால் எழுதப்பட்டும் மொழிபெயர்க்கப்பட்டும் வருகின்றன. அவை விற்பனைக்கிடப்பட்டும் உள்ளன.

கல்வி என்பது தேடி அடைய வேண்டியது என்பது உண்மை. பலர் இன்று அவற்றைத் தேடிப் படிக்கிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் இவ்வாறு எழுதப்படும் நூல்கள் சாதாரணப் பொதுமகனின் வாசிப்புக்கு, அவனது புரிதலுக்கு உகந்தவையாக இருக்கின்றனவா என்ற ஒரு பலமான கேள்வி எனக்குள் அவ்வப்போது எழுவதுண்டு. வலைப் பூக்களில், சமூக வலைத்தளங்களில், பத்திரிகைகளி கூட இவ்வாறான 'படித்தவர்'களுக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்ட மொழி நடையுடன் பல ஆக்கங்களை நான் பார்க்கிறேன்.

சாதாரணப் பொது மகனை விட படித்தவர்களே 'ஈகோ' மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். ஒருவர் எழுதியதை மற்றொருவர் கண்டு கொள்வதுமில்லை, அது குறித்துப் பேசுவதுமில்லை, மற்றொருவருக்குப் பரிந்துரைப்பதும் இல்லை. ஆக இவ்வாறான பல நல்ல விடயங்கள் ஒரே வட்டத்துக்குள் சுழல்வதும் சாதாரண மக்கள் சமூகத்தைச் சென்றடைய முடியாமலும் இருப்பது குறித்து நாம் கவனம் செலுத்துவதுமில்லை.

சாந்தி மார்க்க இஸ்லாத்தைப் பூரணப்படுத்தியிருந்த எனக்கு அடுத்த கட்ட நகர்வைத் தந்தவை மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் குத்பாப் பிரசங்கங்களின் தொகுப்பு நூல்கள். மிகச் சிறிய அளவில் அந்நாட்களில் பகுதி பகுதியாக அவை சிறு நூல்களாக விற்பனைக்கிருந்தன. இப்போது முழுத் தொகுப்பாகக் கிடைக்கிறது.  அவற்றிலிருந்து இஸ்லாம் குறித்த தெளிவைப் பெற்றுக் கொள்ள எந்த ஒரு சாதாரணப் பொது மகனாலும் முடியும். மிக இலகுவான முறையில் குழப்பமற்ற மொழி நடையில் அந்தத் தொகுப்பு அமைந்திருப்பதே அதற்கான காரணம் என்று நினைக்கிறேன்.

அந்நாட்களில் புதிதாக இஸ்லாத்துக்குக் கொண்டு வரப்பட்டவன் பற்றிய ஒரு கதை கிராமங்களில் நிலவி வந்தது. தர்மகர்த்தாவால் இஸ்லாம் மார்க்கம் அறிமுகம் செய்யப்பட்டு 'கத்னா' செய்த பிறகு அவனுக்கு இஸ்லாம் சொல்லிக் கொடுக்க முஅத்தினாரிடம் அவன் ஒப்படைக்கப்பட்டான. பள்ளிவாசலுக்குள் முஅத்தினாரின் மேற்பார்வையில் அவனது வேலை தொழுவது மட்டுமே. தஹஜ்ஜத் தொழுகையிலிருந்து முன் பின் சுன்னத்துத் தொழுகை, மேலதிக சுன்னத்துத் தொழுகைகள் ஈறாக இரவில் வித்ருத் தொழுகையில் அவனது இஸ்லாம் தினமும் முடிவடையும்.

இஸ்லாம் மார்க்கத்துக்கு வந்த அவன் மூன்றாம் தினம் எங்கிருந்து வந்தானோ அங்கேயே போய்ச் சேர்ந்து விட்டான். 'ஏன் திரும்பி வந்து விட்டாய்?' என்று அவனிடம் அவனது நண்பன் ஒருவன் கேட்ட போது,

'இஸ்லாத்தில் இருப்பது லேசான வேல இல்ல!' என்று பதில் சொன்னானாம்.

(மீள்பார்வை இதழ் - 300 -பத்திரிகை பத்தித் தொடர் - 01)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: