Thursday, August 21, 2014

பிஞ்சுகளின் நெஞ்சங்களில் தஞ்சமடைந்தவன்!


முகம்மத் அல் அரீர் தனது குழந்தையுடன்

- ரீஃபாத் அல் அரீர் -
தமிழில் - அஷ்ரஃப் சிஹாப்தீன்
-------------------------------------------

எனது சகோதரர் முகம்மத் அல் அரீர் தனது வீட்டில் இருக்கும் போது இஸ்ரேலிய வான்படைத் தாக்குதலால் உயிரிழந்தான். 31 வயதான அவன் இரண்டு பிள்ளைகளின் தந்தை.

மூன்று தினங்களாக இரத்தம் வெளியேறி இறந்தானா அல்லது வெடி குண்டின் அதிர்வினால்  அல்லது அதன் சப்தத்தினால் இறந்தானா அல்லது இடிபாடுகளுள் சிக்கி இறந்தானா அல்லது இவையெல்லாம் சேர்ந்து அவன் மரணிக்கக் காரணமாய் அமைந்தனவா என்று இன்று வரை யாருக்கும் தெரியவில்லை.

உண்மை என்னவெனில் நான் என் சகோதரன் முகம்மதை இழந்து விட்டேன்!

நான்கு வயதுடைய ரனீம், ஒரு வயது நிரம்பிய ஹம்ஸா ஆகிய அவனுடைய அழகழகான இரண்டு பிள்ளைகளும் தங்களது தந்தையை நிரந்தரமாகவே இழந்து விட்டனர். எங்களுடைய ஏழு வீடுகள் கொண்ட மாடி வீட்டையும் நாங்கள் இழந்து விட்டோம்.

நாலடுக்கு மாடிகள் என்ன... ஆயிரக் கணக்கான மாடிகள் இப்போது இங்கு அழிக்கப்பட்டிருக்கின்றன. உலகம் என்றைக்குமே கண்டிராத கொடூர ஆக்கிரமிப்பின் சாட்சிகளாக நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எங்களது பெற்றோரின் பிள்ளைகளுக்குள் நான் இரண்டாவது நபர். ஒரு பெண், நான் ஆண்களுக்குப் பிறகு ஐந்தாவதாகப் பிறந்தவன் முகம்மத். எனது பழைய ஞாபகங்களுக்குள் முகம்மத் பிறந்த நிகழ்வு மறக்க முடியாதது. அப்போது எனக்கு நான்கு வயது.

எனது சகோதரனுக்கு முகம்மத் என்று பெயர் வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்ட போது நான் அழுது ஆகாத்தியம் பண்ணி அதை மறுத்தேன். 'அவனுக்கு முகம்;மத் என்று பெயர் வைக்கக் கூடாது, ஹம்தா என்றுதான் பெயர் வைக்க விரும்புகிறேன்... ஆம் ஹம்தா!'

அவனை யாராவது முகம்மத் என்று அழைத்தால் எனது முழு மூச்சையும் பலத்தையும் ஒன்று திரட்டிக் கோபத்தில் சத்தமிடுவேன். எனது எதிர்ப்புக் கணக்கில் கொள்ளப்படாமல் அலட்சியம் செய்யப்படும் வரை நான் அப்படித்தான் நடந்து கொண்டேன். பிறகு பலரும் அவனை ஹம்தா என்றும் அழைக்கத் தொடங்கினார்கள். இந்தச் சொல்லும் முகம்மத் என்ற பெயரைச் சார்ந்ததுதான்! எல்லோரும் அவனை ஹம்தா என்று அழைக்கத் தொடங்கினார்கள். ஆனால் எனது கோபத்தைச் சட்டை செய்யாமல் எனது தந்தையார் மட்டும் அவனை முகம்மத் என்றே அழைத்து வந்தார்.

எப்போதும் ஹம்தாவின் நலனே எனது நோக்கமாக இருக்கும். அவன் எனக்கு மட்டும் சொந்தமானவன் போல... இன்னும் சொல்வதானால் அவனது பெயர் ஹம்தா என்று நிரந்தரமாக அழைக்கப்பட வேண்டும் என்றும் அவனை எனது மகனைப் போலவும் பார்த்துக் கொண்டேன்.

1983ல் பிறந்த ஹம்தா தயக்க சுபாவம் கொண்டவனாக இருந்த போதும் நகைச்சுவை உணர்வுள்ளவனாகவும் துணிவுள்ளவனாகவும் இருந்தான். அதிகமாகவும் அமைதியாக இருக்கும் ஹம்தா பேச ஆரம்பித்து விட்டால்  அவனை மிஞ்ச முடியாது.

2000 ம் ஆண்டு உருவான இன்திபாதாவின் போது அவனுடைய வாழ்வில் உண்மையான ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவனது பாடசாலை நண்பர்கள் இஸ்ரேலியர்களால் கொல்லப்பட்ட போது மரண ஊர்வலத்தை முன் நின்று நடத்தும் பிரதான பாத்திரத்தை அவன் வகித்தான்.

மக்கள் தொடர்பாடலில் பட்டம் பெற்ற ஹம்தாவுக்கு பொது மக்களை அணுகும் முறை கைவரப் பெற்றிருந்தது. இரண்டாவது இன்திபாதா நடந்து கொண்டிருந்த போது காஸாவில் எங்கு சென்றாலும் 'ஹம்தா உங்கள் சகோதரனா?' என்று என்னிடம் கேட்குமளவு அவன் பிரபல்யம் பெற்றிருந்தான்.

உள்ளார்ந்த ஆச்சரியத்துடனும் ஒரு புன்னகையுடனும் தலையசைப்பேன். இவனை இந்த அளவுக்கு வேகம் கொள்ளச் செய்தது எது என்று எனக்குள் நானே கேட்டுக் கொள்வேன். தயக்க சுபாவமுள்ள எனது சகோதரன் ஜெரூசலத்திலும் ஷூஜாஇய்யாவிலும் பலஸ்தீனின் எல்லாப் பகுதிகளிலும் நடக்கும் அடக்கு முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்யவும் வழி நடத்தவும் உயிர்த்தியாகிகளின் மரண ஊர்வலங்களை ஏற்பாடு செய்யவும் கவிதை நடை ஆர்ப்பாட்ட வார்த்தைகளை உரத்து ஒலிக்கவும் துணிந்து விட்டான் என்பதைப் பின்னர் உணர்ந்து கொண்டேன்.

பதினான்கு சகோதர உறவுகளுக்குள்ளும் தனித்தன்மை வாய்ந்தவனாகவும் படைப்பூக்கம் கொண்டவனாகவும் ஹம்தா விளங்கினான். 20 வயதை அடைந்ததும் அவனில் பெரும் மாற்றங்களையும் இயங்காற்றலையும் நான் கண்டேன். பொதுமக்கள் முன் லாகவமாகப் பேசும் அவனது திறன் காஸாவின் அல் அக்;ஸா தொலைக்காட்சியினால் நடத்தப்படும் 'நாளைய தலைமுறையை நோக்கி' நிகழ்ச்சியில் வரும் 'கார்க்கோர்' என்ற குறும்பு மிக்க கோழியின் பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது.



ஹம்தாவின் தொலைக் காட்சி நிகழ்ச்சிப் பாத்திரம் பலஸ்தீன் முழுவதும் ஏன் அரபுலகெங்கும் கூடப் பிரபல்யம் பெற்றது. இந்த வருட ஆரம்பத்தில் மற்றொரு தொலைக் காட்சியிலும் அவனுக்கு வாய்ப்புக் கிட்டியது. ஆயினும் இஸ்ரேலியத் தாக்குதல் காரணமாக அந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. எனது சகோதரனின் மரணம் 'கார்கோர்' என்ற பாத்திரத்தில் மகிழ்ந்திருந்த அனைத்தச் சிறுவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

என்னுடைய சகோதரனைக் கொலை செய்ததன் மூலம் ஓர் அபூர்வத் திறமையையும் கல்விசார் நிகழ்ச்சியொன்றை அங்கதமாக நடத்தியதன் மூலம் சிறுவர்கள் அறிவு பெறுவதையும் அழித்து விட்டனர்.

ஹம்தா ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் திருமணம் செய்தான். மிகக் கடுமையாக உழைத்து எமது பெற்றோரின் வீட்டுக்கு மேல் தனது குடும்பத்துக்காக ஒரு மாடியைக் கட்டியெழுப்பியிருந்தான். சென்ற வருடம்தான் வீட்டுத் தளபாடப் பொருட்களை வாங்கி வீட்டைச் சீரமைத்தான்.

ஹம்தா எமது குடும்பத்தை விட்டுப் பிரிந்து விட்டான். எமது குடும்ப அங்கத்தவர்களில் உயிர்த் தியாகம் செய்த 26வது நபர் ஹம்தா. கடந்த வாரம்தான் எமது குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டனர். கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான 12 மணித்தியால போர் நிறுத்தத்தின் போது கட்டட இடிபாடுகளுக்குள்ளிருந்து சடலங்களாக அவர்கள் மீட்கப்பட்டனர்.

தனது இரண்டு மருமகன்;மாரை ஒரு வருடத்துக்கு முன்னர்தான் இழந்திருந்த எனது தாயாருடன் ஹம்தா பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, அவரது தைரியத்தையும் துணிச்சலையும் கண்டு வியந்தேன். எனது தந்தையோ கடந்த காலங்களை விட மேலும் அமைதி காப்பவராக இருந்தார். இருவரும் ஷூஜாயிய்யாவில் நிகழ்ந்த கோரங்களையும் சில குடும்பங்கள் ஐவர் முதல் பன்னிரண்டு பேர் வரையும் ஒரு சில குடும்பங்கள் இருபது பேர் வரையும் இழந்திருப்பதாகச் சொன்னார்கள். 'இது வீரம் விளைந்த பூமி, நாங்கள் இன்னும் உறுதியுடன்தான் இருக்கிறோம்' என்று அவர்கள் சொல்லத் தவறவில்லை. தமது அன்பு மகனை இழந்த நிலையிலும் எனது பெற்றோரினதும் இழப்புக்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் குடும்பங்களினதும் மனோவலிமை கண்டு ஒரு நிம்மதிப் பெருமூச்சுதான் என்னிடமிருந்து வெளிப்பட்டது.

வீடுகளை அழிப்பதன் மூலமும் குழந்தைகளையும் தெருவில் செல்வோரையும் குண்டுகள் வீசிக் கொல்வதன் மூலமும் காஸாவில் இருக்கும் மக்களை அச்சத்தில் உறைய வைத்து தம்மிடம் சரணடையச் செய்யலாம் என்பதே இஸ்ரேலின் கணக்கு. ஆனால் இஸ்ரேலின் இச்செயற்பாடுகள் யாவும் எதிர்மறையான விளைவுகளையே பலஸ்தீனம் முழுவதும் ஏற்படுத்தியிருக்கிறது. பலஸ்தீனியர் நினைப்பதெல்லாம் 'இழப்பதற்கு எம்மிடம் எதுவுமில்லை' என்பதுதான்.

நாங்கள் போராடுவது எங்களுக்காக மட்டும் அல்ல. இது நீதிக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் கொடூர ஆக்கிரமிப்புக்கு எதிராகவுமான உலகளாவிய போராட்டம் என்பதை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம்.

ரனீமும் ஹம்ஸாவும் போல நூற்றுக் கணக்கான சிறார்கள் தந்தையாரை அல்லது தாயாரை அல்லது இருவரையும் இழந்து இஸ்ரேலின் கொலையிலிருந்து தப்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு தந்தையின் அல்லது தாயின் அரவணைப்பின் இதத்தை அவர்களுக்கு யாராலும் வழங்கி விட முடியாது. ஹமாஸ் தலைவர்களுக்கு காஸாவின் அழிவை உணர்த்துவதற்காக மனிதர்களைக் கொன்று கட்டடங்களைத் தகர்க்கும் இஸ்ரேலியர் குழந்தைகளைப் பற்றிச் சிந்திப்பதில்லை.

ரனீமும் ஹம்ஸாவும் எதிர்காலத்தில் இஸ்ரேலின் கொலைகளிலிருந்து தப்பினால்; நீதியற்ற உலகத்தின் முன்னால் பொது மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் இரத்த சாட்சிகளாக அவர்கள் வளர்ந்து வருவார்கள். தங்களது சொந்த வீட்டைத் தகர்த்து அதில் இருந்த தங்கள் தந்தையாரைக் கொலைசெய்தவன் இஸ்ரேலியன் என்ற ஒரே காரணத்துக்காக நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என்பதற்குச் சாட்சிகளாக இருப்பார்கள்.

எனது சகோதரன் கொலை செய்யப்பட்ட போது எல்லோரும் 'முகம்மத்' இறந்து விட்டதாக அழுது பிரலாபித்தார்கள். யாரும் அவனை ஹம்தா என்று அழைக்கவில்லை. அதற்காக நான் யார் மீதும் எரிந்து விழவுமில்லை. அவன் முகம்மத் ஆகவே விடைபெற்றுச் செல்லட்டும் என்று விட்டு விட்டேன்.

மனிதனுக்கும் மனிதனுக்குமிடையில், மனிதனுக்கும் மக்களுக்குமிடையில், மக்களுக்கும் நிலத்துக்குமிடையில், மக்களுக்கும் நினைவுகளுக்குமிடையில் தொடர்புகளை அறுத்து விடும் நோக்கத்தி;ல் இவ்வாறான படுகொலைகளை இஸ்ரேல் அரங்கேற்றி வருகிறது. ஆனால் அது ஒரு போதும் வெற்றி பெறப் போவதேயில்லை. எனது சகோதரனை உடலால் பிரிந்தேனேயொழிய அவனது ஆத்மார்த்த நினைவுகளை என்றைக்கும் என்றைக்கும் நான் இழந்து விடப் போவதில்லை.

அவனது நினைவுகளும் அவனது கதைகளும் அவனது வெகுளிச் சிரிப்பும் எங்கள் நினைவுகளிலும் அவனது இரண்டு குழந்தைகளிடமும் தொலைக் காட்சியில் அவனை விரும்பிய ஆயிரக் கணக்கான சிறுவர்களின் மனங்களிலும் அழியாமல் இருந்து வரும்.

(நன்றி - விடிவெள்ளி 21.08.2014)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: