Friday, October 17, 2014

ஒரு நாடகமன்றோ நடக்குது!


- 4 -

ஒரு நாடகம் அன்றோ நடக்குது!

நான் சிறுவனாக இருந்த காலத்தில் பெருநாள் என்பது உணவிலோ பலகாரங்களிலோ இருந்திருக்கவில்லை.

காலையில் கிணற்றுக் குளிர் நீரில் குளிப்பாட்டப்பட்டுப் புத்தாடை அணிந்து பள்ளிவாசலுக்கு அனுப்பப்படுவோம். அங்கு அமர்ந்திருந்து கோரஸாக தக்பீர் முழங்குவது முதற் கட்டம். இரண்டாம் கட்டமாக காலையிலேயே திரும்பிய பக்கமெல்லாம் ஊர் முழுக்க  நாகூர் ஈ.எம். ஹனிபாவின் தீனிசை முழங்க ஓடாவிமார் போட்டிருக்கும் தொட்டில் ஊஞ்சல் அல்லது சுழலூஞ்சலில் பத்துச் சதம் கொடுத்து ஆடுவது. தொட்டில் போல் அமைந்திருக்கும் ஒரு பெட்டிக்குள் இருவர் அமரலாம். நான்கு பெட்டிகளில் எண்மரை அமர்ந்தி ஓடாவியார் தனியொருவராய் ஊஞ்சலை இயக்கத் தொடங்குவார். அது இப்போது உள்ளது போல் மின்சார இயந்திரங்களால் இயக்கப்படுவது அல்ல, ஒரு வலிமையான மரப் பிடியினால் அமைக்கப்பட்ட பெரிய தடியை முன்னுக்கும் பின்னுக்குமாகத் தள்ளவும் இழுக்கவுமான தொழில் நுட்பத்தில்  ஊஞ்சல் சுழலத் தொடங்கும். அதைத் தனியொருவராக ஓடாவியார் இயக்குவார். இயக்கும் போது அவரது கைத் தசைகள் பொங்கி நரம்புகள் முறுக்கேறுவதை நான் பார்த்து வியப்பதுண்டு.

இதுதான் பெருநாள். மாலை நேரம் அந்த இடம் களைகட்டும். சிறார்கள் அங்கும் இங்கும் ஓடித் திரிவதில் புழுதி பறக்கும். அங்கு ஒலித்துக் கொண்டிருக்கும் ஸ்பீக்கரில் உள்ளுர் அறிவிப்பாளர்கள் முழங்குவார்கள். பாடத் தெரிந்தவர்கள் தம்மை ஈ.எம். ஹனீபா, ரீ.எம். சவுந்தரராஜன் என்று நினைத்துக் கொண்டு அவ்வப்போது பிளிறுவார்கள், சிலர் கிராஅத் ஓதுவார்கள். யாருக்கும் கொடுப்பனவு கிடையாது. தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பு அது. அதைக் கூட ஒரு கூட்டம் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும்.

அன்றைய முஸ்லிம் கிராமங்கள் இப்போது போன்று அடர்த்தியாக இருந்திருக்கவில்லை. வருடத்தில் மூன்று முறை கொண்டாட்டங்கள் வரும். முகம்மது (ஸல்) பிறந்த தினம் அதில் ஒன்று. குர்ஆன் மத்ரஸாவில் ஆலிம் தரும் பச்சைப் பிறை பதித்த, ஈர்க்கில் ஒட்டப்பட்ட வெள்ளைக் கொடியை ஏந்தியபடி வெள்ளுடை, தொப்பியணிந்த சிறுவர்கள் ஸலவாத்துச் சொல்லியபடி ஊர்வலம் போவார்கள். நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டுமே நான் மேற்சொன்னவாறு ஊஞ்சல் களேபரத்தோடு நடக்கும். அதிலும் நோன்புப் பெருநாளில் 'ஃபித்றா' வேறு கிடைப்பதால் கையில் சில்லறை நிறையும். சில வேளை இக் கொண்டாட்டங்கள் ஏழு நாட்கள் தொடர்வதும் உண்டு.

பெரும் செலவில் ஊஞ்சல் அமைக்கும் ஓடாவிமாரின் வசந்த காலம் இது. சிறுவர்களது பெருநாள் மற்றும் சந்தோஷ காலத்தைத் தீர்மானிப்பவராக அவர்களே விளங்கினர்.

பெரும்பாலும் இரவில்தான் ஊஞ்சல் வெளியானது களைகட்டும். கிராமத்து ஆண்களும் பெண்களுமாக நிறைந்து காணப்படுவர். அதற்குக் காரணம் நாடகங்கள். இரண்டு ட்ரக்டர் பெட்டிகளை இணைத்துத் தயாரிக்கப்பட்ட ஒரு மேடையில் இரவில் நாடகங்கள் நடக்கும். பெண்கள் ஒரு புறமும் ஆண்கள் ஒரு புறமுமாக நின்று நாடகங்களை ரசிப்பார்கள். மறுபுறம் ஊஞ்சல் ஆடிக் கொண்டேயிருக்கும்.

அக்காலத்தில் ஓரளவு வசதியுள்ள வீடுகளிலேயே வானொலிப் பெட்டி இருந்தது. தொழிலுக்கு உழைத்தல் தவிர அன்றைய மனிதருக்குத் தமது ரசனைப் பசிக்கு எதுவும் இருந்திருக்கவில்லை. எனவேதான் பெருநாள் தீனிசையிலும் நாடகங்களிலும் மக்கள் வருடத்துக்கு இருமுறை மனதைப் பறி கொடுத்து மயங்கி நின்றார்கள்.

நாடகத்திலிருந்தே சினிமா வந்தது. சினிமா வந்த பிறகும் கூட நாடகத்தின் மவுசு குறையவில்லை. ட்ரான்சிஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நாடகங்களில் கட்டுண்டு கிடந்தவர்கள் ஏராளம்.

கிராமங்களில் முன்னரைப் போன்று பெருநாள்கள் இப்போது களைகட்டுவதில்லை. ஊஞ்சல் அமைப்பதற்கு நிலமில்லை. ஓடாவிகளின் மர வேலைத் தொழில் நிறுவனமயப் பட்டுவிட்டது. மரத் தளபாடங்களின் இடத்தை பிளாஸ்டிக், இரும்பு, அலுமினியம் ஆகியன பிடித்துக் கொண்டன. நாடகங்களைத் தொலைக்காட்சிகள் எடுத்துக் கொண்டன. வீட்டுக்குள்ளே குறுந்திரைகளில் வருடக் கணக்காக 'சீரியல்' ஓடுகின்றது. 'சீரியல்' நாடகங்கள் மனோ வக்கிரத்தை ஏற்படுத்தி மனச் சிதைவை ஏற்படுத்துகின்றன என்று சொல்லியிருக்கிறார் உளவியல் பேராசிரியரான மறைந்த பெரியார்தாசன் அப்துல்லாஹ்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் நமக்கான ஒரு கலாசார மகிழ்வை நாம் இழந்து விட்டு நிற்கிறோம். இஸ்லாத்தினது நல்லம்சங்களை, குர்ஆன் போதனைகளை, நபிகளாரினதும் ஸஹாபாக்களினதும் வாழ்வியலை, மக்கள் கொள்ளவேண்டிய தெளிவை, தமது சமூகத்துக்கெதிரான சதிகளை எல்லாம் மக்கள் முன் இலகுவாக எடுத்துச் சொல்லக் கூடிய அற்புத சாதனம்தான் நாடகம். ஆனால் அது பற்றி யாரும் அக்கறைப் படுவதில்லை.

இந்த அற்புத ஊடகத்தின் வல்லமையை அறிந்த அமைப்பு ரீதியான தாஈக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  தான் பேச வேண்டும், மக்கள் முன் எனது பேச்சு தெளிவை ஏற்படுத்தும் என்ற 'நான்' என்ற எண்ணமும் தன்னை முற்படுத்தும் 'நஃப்ஸூ'ம் அவர்களை இதன்பால் திரும்ப விடுவதில்லை. ஏனெனில் நாடகத்தை மக்கள் முன் கொண்டு செல்பவர்கள் கலைஞர்களே தவிர பயான்கள் என்று 'பைலா' அடிப்பவர்கள் அல்லர். எனவே தாங்கள் இரண்டாம் பட்சமாகி விடுவோம் என்ற உள்ளார்ந்த அச்சம் இந்த ஊடகத்தைப் பயன் படுத்துவதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. தெருநாடகங்கள் நடத்தப்படுவது பற்றியும் அவை ஏன் நடத்தப்படுகின்றன என்பது பற்றியும் இவர்கள் அறியாமலுமில்லை.

இதைப் பற்றியும் இவர்களைப் பற்றியும் சிந்திக்கும் போதெல்லாம் நான் பழைய நாட்களுக்குத் திரும்புகிறேன். ஓடாவிமாரின் ஊஞ்சல் வெளி நாடகங்கள் பற்றி அறிவிப்பாளர் காலையிலிருந்து நாடகம் ஆரம்பமாகும் வரை அறிவித்துக் கொண்டேயிருப்பார்...

'..... வாழ் இஸ்லாமியப் பெருங்குடி மக்களே! வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நாடகம்! ........... குழுவினர் வழங்கும்   'ஓடிப்போனவள்' என்ற நாடகத்தை இன்றிரவு 10.00 மணிக்குக் காணத் தவறாதீர்கள்....!'

(மீள்பார்வை இதழ் 303)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: