Wednesday, December 10, 2014

கண்ணுக்குத் தெரியாத கபட வலை!


 - 08 -

பத்தாம் ஆண்டில் கற்கும் மலர்ந்த முகச் சிறுவன் அவன். அவர்களது வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நடந்த உபசாரத்தில் கவனத்தோடும் பொறுப்போடும் அவன் செயற்பட்ட விதத்தில் எனது மனசில் ஒட்டிக் கொண்டான். அவனைச் சிலாகித்துக் கதைக்கும் போது அவனைப் பற்றிய இன்னும் சில நல்ல தகவல்கள் கிடைக்கப் பெற்றேன். நடை தூரத்தில் இருக்கும் பள்ளிவாசலுக்கு 'தஹஜ்ஜத்' தொழுகைக்காக அதிகாலையில் எழுந்து சென்று விடுகிறான். மாலை வேளைகளில் வெள்ளை நிற ஜூப்பாவும் தொப்பியும் அணிந்திருப்பவனாகப் பல முறை கண்டிருக்கிறேன். எப்போது என்னைக் கண்டாலும் முன்னால் வந்து ஸலாம் சொல்லிப் போவான்.  அவன் கற்பது பல்லின சர்வதேசப் பாடசாலை ஒன்றில். அவனுடைய பெயரைக் காமில் என்று வைத்துக் கொள்ளலாம்!

சில காலங்களுக்குப் பின்னர் காமில் பற்றி ஓர் அதிர்ச்சிகரமான செய்தி எனக்குக் கிடைத்தது. தனது வயதொத்த மற்றும் சற்று வயது கூடிய நண்பர்களுடன் இணைந்து அவன் போதைப் பொருள் பாவிக்கிறான் என்பதே அந்தச் செய்தி!

காமிலின் போதைக் குழுவில் உள்ளவர்களில் ஒருவனான சலீமின் இளைய சகோதரன் மூலம் வந்த செய்தி இது. சலீமின் பழக்கம் உணர்ந்த அவனது வீட்டார் அவனை அவனது மாமாவின் மேற்பார்வையில் பாட்டனாரிடம் இடம் மாற்றிப் பொறுப்பளித்திருந்தார்கள். நான் கண்ணால் காணாது போனாலும் கூட இந்த நடவடிக்கைகளை அறிந்திருந்தேன். அவன் மாற்றப்பட்டிருந்த இடத்தில் இருப்பதைக் கண்ணால் கண்டேன். செய்தியினது பின்னணியை நம்பியே ஆகவேண்டியிருந்தது.

சம்பந்தப்பட்ட பயல்களில் ஒருவனுக்குத் தந்தை இல்லை. தாய், தாயின் பெற்றோர் பார்வையில் வளர்பவன். மற்றொருவன் தாயும் தந்தையும் தொழில் நிமித்தம் பகல் பொழுதுகள் முழுவதும் அநேகமாக சனி, ஞாயிறுகளிலும் கூட - வீட்டில் இராமல் வெளியேறி விடுபவர்கள். கட்டுப்பாடும் அவதானமும் இல்லாத காரணத்தாலும் எந்நேரமும் வெளியேறி எங்கு வேண்டுமானாலும் அலையக் கிடைத்த வாய்ப்பினாலும் சகதிக்குள் இறங்கியிருக்கிறார்கள்.

மேற்குறித்த சம்பவம் நடந்தது தலைநகரில். ஒரு குறிப்பிட்ட காலம் வரை போதைப் பொருள் பாவனை தலை நகரிலும் அதுசார் அயல் பிரதேசங்களிலும் மட்டுமே நிலவி வந்தது. பின்னர் பிரதான நகரங்களுக்குப் பரந்து இன்று கிராமங்கள் வரை விஷம் போலப் பரவியிருக்கிறது. ஒரே வலைப் பின்னலில் தொடர்புட்ட மிகக் கவனமாகவும் அந்தரங்கமாகவும் நடத்தப்படும் இந்த வியாபாரம் இலகுவில் பொதுமகனின் கண்களுக்குத் தோற்றுவதில்லை. அண்மைக் காலமாக, குறிப்பாக உள்நாட்டு யுத்தம் முடிந்த பின்னர் இந்த வியாபாரத்தின் பின்னணியில் இருப்பது வெறும் பணம் பார்க்கும் நோக்கம் மட்டுமல்ல என்பதுதான் நமது அவதானத்துக்குட்படாத ஆனால் அபாயகரமான விடயமாகும்.

யுத்தம் என்ற ஒன்று - அது மற்றொரு நாட்டுடனான போராக இருந்தாலென்ன, உள்நாட்டுப் போராக இருந்தாலென்ன - மோசமான பின் விளைவுகளையே விதைத்துச் செல்லும். இதற்கு நம்முன்னால் உள்ள நல்ல உதாரணம் ஆப்கானிஸ்தான். ஆப்கானோடு இலங்கையை ஒப்பிட முடியாதுதான். ஆனால் யுத்தத்தின் பின் விளைவுகள் வேறு பட்ட போதும் ஏற்படுத்தும் சமூகத் தாக்கம் என்பது ஒரே நூலில் ஓடும் அம்சமேயாகும்.

இலங்கையின் சிறுபான்மைகள் மீண்டும் ஒரு முறை தம்மைக் கட்டமைத்துக் கொண்டு எழுந்து விடக் கூடாது என்பதில் பெரும்பான்மை மிகவும் அவதானமாகச் செயற்பட்டு வருகிறது. அப்படி ஒரு எண்ணம் கூடச் சிறுபான்மையினர் மத்தியில் தோற்றம் பெறாமலும் பெரும்பான்மையின் கட்டுப்பாட்டுக்கு மீறிச் செல்லாமலும் - கண்காணிக்க ஏதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உணர முடிகிறது.

அதாவது இனங்களுக்கிடையில் பிரகடனப்படுத்தப்படாத ஒரு யுத்தம் தொடர்கிறது என்று சொல்ல முடியும். அதனடிப்படையில்தான் இந்தப் போதைப் பொருள் பாவனைக்கு இளைய சமூகத்தைப் பழக்கி விடுதல், கலாசாரச் சீரழிவுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகள் திரை மறைவில் நடக்கிறதா என்ற சந்தேகம் தோன்றுகிறது.

சிறுபான்மையினர் பெருமளவில் வசிக்கும் பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனை, மதுப் பாவனை என்பன என்றுமில்லாதவாறு அதிகரித்துச் செல்வதை அண்மையில் பல்வேறு வலைத் தளங்களிலும் செய்திகளிலும் நான் படித்திருக்கிறேன். இறுக்கமான பாதுகாப்புப் பார்வைக்குள் இது இயல்பாகப் பரவுகிறது என்பதை இலகுவில் ஏற்றுக் கொள்ளத் தயங்கி ஆகவேண்டியிருக்கிறது.

இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை கலாசாரச் சீரழிவு என்ற ஒன்று இல்லாது போனாலும் கூட குறிப்பிட்ட ஒரு சில இஸ்லாமிய இயக்கங்களின் பிரிவினைகளும் அவற்றின் சண்டை, சச்சரவுகளும் சமூகத்துக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்தச் சீரழிவானது போதைப் பொருட்களால் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படும் தாக்கத்துக்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல என்றே சொல்லத் தோன்றுகிறது.

இரண்டு ஆபத்துக்களுக்குப் பின்னாலும் இருப்பவை ஒரே விதமான நோக்கங்கள்தாம் என்பதைப் புரிந்து கொள்ள, யாரும் 'ஆல் இன் ஆல் அழகு ராஜா'க்களாக இருந்தாக வேண்டிய அவசியம் இல்லை!

நன்றி - (மீள்பார்வை)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: